லைவ் ரைட்டர் டெஸ்ட் பதிவு
Posted on August 7, 2007. Filed under: அனுபவம், இணைய கலாச்சாரம், கணினி, கொஞ்சம் பெரிய பதிவு, பரிந்துரை, மேட்டர் |
வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு எனக்குத் திருப்தியளித்ததில்லை. மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் விண்டோஸையும் ஆபீஸையும் வேறு வழியில்லாமல் பயன்படுத்தும் பலரில் ஒருவன் நான். அதனால் வேறு எந்த மைக்ரோசாஃப்ட் தயாரிப்பையும் பயன்படுத்தியதில்லை.
பிக் பிரதர் முழுக்க முழுக்க வலைப்பதிதலுக்காகவே உருவாக்கிய ஒரு மென்பொருளில் என்ன இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விண்டோஸ் லைவ் ரைட்டரை நிறுவினேன். இதை நிறுவிப் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் இதன் எளிமையும் தோற்றமும் என்னைக் கவர்ந்தன (படம் 1). எனது அனுபவம் குறித்து மேலும் சில வரிகள் பின்வருமாறு…
லைவ் ரைட்டர் கோப்பின் சைஸ் 3.58 எம்.பி.தான். புள்ளிவலை சட்டகப்பணி (.NET Framework) உமது கணினியில் இல்லையென்றால் 23 எம்.பி. கோப்பை இறக்கிக்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லாமல் இன்ஸ்டால் ஆகிவிடுகிறது.
பிறகு லைவ் ரைட்டர் சுருக்குவழி மேல் இரட்டைச் சொடுக்கிட்டால் (double click) என் ஃபயர்வால் உடனே அபாய அறிவிப்பு செய்கிறது. வழக்கமான மைக்ரோசாஃப்ட் உளவு வேலைதான். லைவ் ரைட்டர் என்னைக் கேட்காமல் மைக்ரோசாஃப்ட்டின் சர்வர் ஒன்றுடன் இணைக்கப் பார்த்தது. அதைத் தடுத்த பின் லைவ் ரைட்டர் சட்டென்று தொடங்குகிறது.
எம்.எஸ். ஆபீஸ் 2003ஐ உரித்து வைத்தாற்போன்ற தோற்றம். வேர்ட்பேடின் எளிமை. மிகச் சுலபமாக வலைப்பதிவுக் கணக்கு விவரங்களைப் பதிய முடிகிறது. நம் வலைப்பதிவில் என்ன தீம் பயன்படுத்துகிறோமோ அதன் லேஅவுட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இதன் பதிவெழுதும் திரை (எழுதி, compose screen…). அதாவது நம் வலைப்பதிவில் நேரடியாக எழுதும் ஃபீலிங்கைக் கொண்டுவருகிறார்களாம் (படம் 2).
வேர்ட்பிரஸிலும் பிளாகரிலும் எழுதியின் அகலம் கச்சிதமாக இருக்கும். லைவ் ரைட்டரின் எழுதி அதை விட அகலமாக இருப்பது திரையரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து 70 MM படம் பார்ப்பது போல் அசௌகரியமாக இருக்கிறது. ஆனால் பெரிய தலைவலி என்று சொல்ல முடியாது. போல்டு, இட்டாலிக்ஸ், படம் செருகுதல், குறிச்சொல் சேர்த்தல் என்று வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன.
பதிவை எழுதும்போதே அதன் வரைவை நம் வலைப்பதிவில் சேமித்துக்கொள்ளலாம். HTML பார்த்து மாற்றலாம். முன்னோட்டம் பார்க்கும் வசதி அட்டகாசம். பதிவைப் போட்டதும் நம் வலைப்பதிவில் அது எப்படித் தெரியுமோ அப்படிக் காட்டுகிறது (படம் 3). படத்தை ஒட்டியதும் படத்தின் சைஸ், எஃபெக்டுகள் போன்ற வசதிகள் வலப்பக்கம் தெரிகின்றன. சும்மா சில நகாசுகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரு வலைப்பதிவுக்கு இது போதும். தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் Xanga-வில் வலைப்பதிவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
கருவிப் பட்டையின் வலப்பக்கம் வேர்ட்பிரஸ் குறிச்சொற்களின் (Categories) தொங்கு பட்டியலைப் பார்க்கலாம் (படம் 4). எழுதும் பகுதிக்குக் கீழே, ஸ்டேட்டஸ் பாருக்கு மேலே, பதிவின் விவரங்கள், பின்தொடர் சுட்டி ஆகிய விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
Tools > Preferences என்ற மெனுப் பாதையில் போனால் ping சர்வர்களில் தமிழ் பிங் சர்வர்களை சேர்க்கலாம் (எனக்குத் தேன்கூடு வேலை செய்கிறது).
இது பீட்டா பதிப்பு. ஒரே விஷயத்திற்கு அங்கங்கே பட்டன்கள் இருக்கின்றன. உதாரணமாக, பின்தொடர் சுட்டி கொடுக்க இரண்டு இடங்களில் க்ளிக் செய்யலாம் - எழுதும் பகுதிக்குக் கீழே, பிறகு கருவிப் பட்டையில் கடைசி பட்டன் மேலே. பிறகு முன்னோட்டத்தைப் பார்க்க View மெனுவில் போயும் க்ளிக் செய்யலாம், கருவிப் பட்டைக்கு மேலுள்ள சாதா பட்டையில் ஒரு பட்டனையும் தட்டலாம்.